வேடசந்தூர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது


வேடசந்தூர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 11:29 PM GMT (Updated: 5 Aug 2018 11:29 PM GMT)

வேடசந்தூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர், 


ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர், வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மொபட்டில் வந்த மர்மநபர்கள் 3 பேர், அவரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கினர். மேலும் அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

அதேபோல சேடபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). விவசாயி. சம்பவத்தன்று இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் நவாமரத்துப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் அவரை தாக்கி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வழிப்பறி கும்பலை பிடிக்க வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த வழிப்பறி கும்பல் அகரம் டாஸ்மாக் கடை பின்புறம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த வழிப்பறி கும்பல் தப்பியோட முயன்றது. இருப்பினும் போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தாடிக்கொம்புவை சேர்ந்த ஸ்டாலின் ஆரோக்கியசாமி (23), திண்டுக்கல்லை சேர்ந்த அருள்குமார் (22), மறவபட்டிபுதூரை சேர்ந்த ஜான்கென்னடி (21) என்பதும், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு மொபட், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள், வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story