திருப்பூருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


திருப்பூருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 7 Aug 2018 5:15 AM IST (Updated: 7 Aug 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் மனுகொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்லடம் சின்னியகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் 100 மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் கடையை திடீரென திறந்து வைத்துள்ளனர். தினந்தோறும் டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் ரோடு வழியாக மாணவ, மாணவிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் எங்கள் குழந்தைகளும், பெண்களும் அந்த வழியாக செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த கடையை உடனடியாக இங்கிருந்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கேயம் நெய்க்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிப்பதை உடனடியாக கைவிட வேண்டும். கோவில், பள்ளி, குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்காமல், குடியிருப்பு அல்லாத பகுதியில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பல்லடம் சின்னகோடாங்கிபாளையம் கே.என்.புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகில் மதுபானக்கடை கடந்த 3–ந்தேதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இது எங்கள் பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோல, கருவலூர் ரோடு நம்பியாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது கழுத்தில் காலி மதுபாட்டில்களை அணிந்து கொண்டு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் சென்று கொடுத்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களின் தொந்தரவு குடியிருப்பு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 2–ம் மண்டலத்திற்குட்பட்ட நெருப்பெரிச்சல், பூலுவப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை அந்த பகுதியில் உள்ள தனியார் நபர் ஒருவர் போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story