குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூட வேண்டும், பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூட வேண்டும், பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 Aug 2018 11:30 PM GMT (Updated: 6 Aug 2018 11:30 PM GMT)

கொடுவாய் நாட்டாமை வலசு குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

அந்த வகையில் கொடுவாய் நாட்டாமை வலசு என்.காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். எங்கள் குடியிருப்புக்கு நடுவே தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் இரவு நேரங்களில் வைக்கப்படும் வெடியால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் அடிக்கடி அதிர்வடைகிறது. மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாறைகளுக்கு வைக்கப்படும் வெடிமருந்து அதிக சத்தத்துடன் வெடிப்பதால் குழந்தைகள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் அச்சப்படுகின்றனர். இதுமட்டுமின்றி குவாரியில் இருந்து வெளியேறும் பாறை துகள்கள் பறந்து வீடுகள் முழுவதும் தேங்குகின்றன. இதனால் இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் நகராட்சி 13–வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் தார் கலவை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேறும் கரும்புகையால் காற்று முழுவதும் மாசடைந்து வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. இதை குடியிருப்பு பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த தார் கலவை தயாரிக்கும் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் 32–வது வார்டுக்குட்பட்ட மண்ணரை, பாவடிக்கல் வீதியை சேர்ந்த ஆதிதிராவிட இளைஞர் மகேஸ்வரனை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் சாதியின் பெயரை சொல்லி கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அதிதிராவிடர்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மகேஸ்வரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு வழிபாடு நடத்த ஏற்கனவே செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே உள்ள கோவிலில் இருந்து சுமார் 20 அடிக்கும் அருகில் ஹவுசிங் யூனிட் நுழைவு வாயிலில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 2 கோவில்களை கட்டி வருகின்றனர். இதன் அருகிலேயே வேறொரு இடத்தையும் ஆக்கிரமித்து மற்றொரு கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அனுமதி பெறாமல் கோவில் கட்டபட்டு வருவதால் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 4–வது வீதியில் பள்ளி வாசலுக்கு சில அடி தூரத்தில் சிறிய அளவில் விநாயகர் கோவில் இருந்தது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த இந்துக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக சில இந்து அமைப்பினர் செயல்பட்டு, கோவிலை பல லட்சம் செலவில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதியின்றி செய்து வருவதால் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story