நடுக்கடலில் விபத்து: விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதியது; குமரி மீனவர்கள் 3 பேர் சாவு


நடுக்கடலில் விபத்து: விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதியது; குமரி மீனவர்கள் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2018 4:45 AM IST (Updated: 8 Aug 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

கொச்சி அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதியது. இதில் குமரி மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 9 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கருங்கல்,

கேரள மாநிலம் கொச்சி அருகே முனம்பத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், ஏசுபாலன் உள்பட 14 பேர் நேற்று முன்தினம் மாலையில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏசுபாலன் விசைப்படகில் அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் திடீரென்று பயங்கரமாக மோதியது. இதில் விசைப்படகு பலத்த சேதம் அடைந்தது. விசைப்படகில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறியபடி கடலுக்குள் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டனர். படகு மீது மோதிய சரக்கு கப்பல் நிற்காமல் சென்று விட்டது.

அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சரக்கு கப்பல் மோதியதில் சேதம் அடைந்த விசைப்படகு இருந்த திசையை நோக்கி வேகமாக தங்களது விசைப்படகுகளில் வந்தனர். அதற்குள் சேதமான விசைப்படகு கடலுக்குள் மூழ்கியது.

தூக்கி வீசப்பட்ட மீனவர்களில் சிலர் விசைப்படகின் உடைந்த பாகங்களை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்தனர். அந்த பகுதியில் இருந்து விரைந்து வந்த மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேரை உயிருடன் மீட்டனர். 3 பேரை பிணமாக மீட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை முனம்பம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகுதான் உயிருடன் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் உயிரிழந்த மீனவர்கள் 3 பேரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் யாக்கோபு, யுகநாதன் ஆகியோர் ராமன்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதும், சகாயராஜ் முள்ளூர்துறையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் கடலில் மூழ்கிய படகில் இருந்த ஏசுபாலன் மற்றும் ராமன்துறையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், ஷானு, எட்வின், மற்றொரு சகாயராஜ், மணக்குடியை சேர்ந்த வர்சன், மரியராஜன் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் என 9 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அவர்களை தேடும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி கேரள கடலோர காவல்படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலியான யாக்கோபுக்கு லூர்து அம்மாள் என்ற மனைவியும், அந்தோணிசாமி என்ற மகனும், மரியரோஸ் என்ற மகளும் உள்ளனர். மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது. யுகநாதனுக்கு விஜிலா என்ற மனைவியும், ஆன்சி (22), அன்சா (20), அஸ்வினி (18) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜூக்கு, வைலட் மேரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

மீனவர்கள் இறந்த தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். இதுபோல், மாயமான மீனவர்களின் உறவினர்களும் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். குமரி மீனவர்கள் கடலில் மூழ்கி பலியானதால் ராமன்துறை, முள்ளூர்துறை, மணக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.

படகு விபத்தில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story