கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் போலீசார் விசாரணை


கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Aug 2018 4:00 AM IST (Updated: 8 Aug 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் ஆற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது கீழகொட்டையூர் கிராமம். இங்கு உள்ள காவிரி ஆற்றில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து, கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் பிணத்தை மீட்டனர்.

அப்போது அந்த வாலிபரின் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருடைய முதுகு பகுதியில் காயம் இருந்ததையும் போலீசார் கவனித்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? காலில் கயிற்றை கட்டியது யார்? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story