குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது தீயை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை


குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது தீயை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2018 4:15 AM IST (Updated: 10 Aug 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கு 2-வது நாளாக தீப்பிடித்து எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நகர் பகுதியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. பின்னர் அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தரம் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக குப்பை கிடங்கில் மலைபோன்று தேங்கி கிடக்கும் குப்பைகளை தரம்பிரிக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் கிடக்கும் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேற்கண்ட இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென்று பரவி குப்பை கிடங்கு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது. நேற்று 2-ம் நாளாக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த பணியை நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) காந்திராஜன், நகராட்சி பொறியாளர் ஜோதிமணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த குப்பை கிடங்கை சுற்றி 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த புகை மண்டலத்தால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்தால் அருகில் வீடுகளுக்கு தீப்பற்றிவிடுமோ? என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே குடியிருப்புகளுக்கு அருகே உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story