திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையுடன் பாய்ந்த தண்ணீர், பொதுமக்கள் குற்றச்சாட்டு


திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையுடன் பாய்ந்த தண்ணீர், பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Aug 2018 11:45 PM GMT (Updated: 10 Aug 2018 9:40 PM GMT)

திருப்பூரில் வெள்ளை நுரையோடு நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஓடியது. சாயக்கழிவுநீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

திருப்பூர்,

பனியன் தொழில் நகரான திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் வெளியேற்றியதால் விவசாய நிலங்கள் பாழ்பட்டுபோனது. இதை தடுக்கும் வகையில் சாயக்கழிவுநீரை பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து அந்த நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க அவ்வப்போது முறைகேடாக சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விடுவதும் தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது.

பொதுவாக மழை பெய்யும் காலத்தில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்லும்போது சாயக்கழிவுநீரை திறந்து விட்டு நுரை பொங்கி பாய்வது வழக்கம். ஆனால் நேற்று மாலை நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரை பொங்க தண்ணீர் பாய்ந்தது. திருப்பூர் பெத்திசெட்டிப்புரம், ராய புரம் பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையோடு தண்ணீர் ஓடியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரசாயன கழிவுகள் கலக்கும்போது தான் தண்ணீர் நுரை பொங்கி பாயும். நேற்று அதிக அளவில் வெள்ளை நுரையாக நொய்யல் ஆறு காட்சியளித்தது. மாலை நேரத்தில் திடீரென்று நொய்யல் ஆற்றில் கழிவுநீர் திறந்து விட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.

இது குறித்து அந்த பகுதியினர் கூறும்போது, நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக ஒருபுறம் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். ஆனால் மறுபுறம் சாயக்கழிவுநீரை திறந்து விட்டு விடுகிறார்கள். குறிப்பாக இரவு, அதிகாலை நேரத்தில் இவ்வாறு நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்து விடுகிறார்கள். வெள்ளை நுரையோடு தண்ணீர் பாயும்போதே நமக்கு தெரிகிறது. சில நேரங்களில் பல வண்ணங்களில் சாயநீரையும் அப்படியே திறந்து விட்டு விடுகிறார்கள். இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நொய்யல் ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில் ரூ.300 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும், மீண்டும் சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் பாய்வது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story