வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Aug 2018 4:30 AM IST (Updated: 12 Aug 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 78). விவசாயி. இவரது மனைவி அனுசுயா (57). இவர்களுக்கு சரவணன், கோபால் ஆகிய 2 மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சரவணன் சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். கோபாலும், பிரியாவும் தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியாவை பார்ப்பதற்காக பக்தவச்சலமும், அவரது மனைவி அனுசுயாவும் வீட்டை பூட்டி விட்டு கடந்த 7-ந்தேதி சென்னைக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தவச்சலம் வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சென்னையில் உள்ள பக்தவச்சலத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பக்தவச்சலம், கோபால் ஆகிய 2 பேரும் கவரப்பாளையத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த மர பீரோவின் கதவு உடைக்கப்பட்ட நிலையில், துணிகள் சிதறிக் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவின் உள்ளே பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பக்தவச்சலம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டிலிருந்து சிறிது தூரம் போய் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

கவரப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளில் இதுபோன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடப்பது வாடிக்கையாகி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மர பீரோவின் பக்கத்தில் இருந்த இரும்பு பீரோவை மர்ம நபர்கள் உடைக்காததால் அதில் இருந்த தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது. 

Next Story