காவிரி தாய் கருணையால் கர்நாடக-தமிழக விவசாயிகள் நிம்மதியாக உள்ளனர்


காவிரி தாய் கருணையால் கர்நாடக-தமிழக விவசாயிகள் நிம்மதியாக உள்ளனர்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:52 AM IST (Updated: 12 Aug 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

காவிரி தாய் கருணையால் கர்நாடக-தமிழக விவசாயிகள் நிம்மதியாக உள்ளனர் என்று குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரு,

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே சீதா புராவில் வயலில் இறங்கி முதல்-மந்திரி குமாரசாமி நெல் நாற்று நட்டார். பின்னர் அவர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:-

விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து தீர்க்க 25 ஆண்டுகளுக்கு முன்பு வயல்களில் இறங்கி நான் நாற்று நட்டுள்ளேன். தற்போது இன்று (அதாவது நேற்று) நாற்று நட்டுள்ளேன். விவசாயிகளும், குறிப்பாக பெண் விவசாய தொழிலாளர்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கும் தெரியும். ஏனெனில் நானும் ஒரு விவசாயி. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.9 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை அரசு வழங்கியுள்ளது. அதுபோல் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். கூடிய விரைவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டணி ஆட்சியில் விவசாயிகள், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உறுதியாக நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

விவசாயிகள் யாரும் தயவுசெய்து தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று எனது இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். கடவுளின் மற்றும் தந்தை-தாய் ஆசிர்வாதத்துடன் நான் முதல்-மந்திரி ஆகியுள்ளேன். என் மீது மக்கள் நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவேன்.

நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்று 3 மாதங்கள் தான் ஆகிறது. எனவே பொறுமையாக இருங்கள். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். விநாயகர் சதுர்த்தி அன்று விவசாயிகளுக்கு மட்டுமல்ல மாநிலம் முழுவதும் வசிக்கும் 6½ கோடி மக்களுக்கும் தித்திப்பான செய்தி அறிவிக்க உள்ளேன். தென்கர்நாடகம், வட கர்நாடகம் என மாநிலத்தை பிரிக்க நான் விரும்பவில்லை. கிராமம், நகரம் என்றும் வேறுபாடு பார்க்க விரும்பவில்லை. அனைத்து பகுதியும் எனக்கு ஒன்று தான்.

கிராமங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகினால் தான் நகரங்களில் மக்கள் நன்றாக வாழ முடியும். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. சாமுண்டீஸ்வரி அம்மன் அருளால் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கர்நாடக விவசாயிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு விவசாயிகளும் பயன் அடைந்து வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்னைக்கு நானும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும் சென்றோம். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் என்னையும், தேவேகவுடாவையும் வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதற்கு காவிரி தாய் தான் காரணம். காவிரி தாய் கருணையால் கர்நாடகம்-தமிழ்நாடு ஆகிய இருமாநில விவசாயிகளும் தற்போது நிம்மதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story