ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 7 பேர் கைது 22 லாரிகள் பறிமுதல்


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 7 பேர் கைது 22 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:59 PM GMT (Updated: 12 Aug 2018 10:59 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். 22 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் ஆரம்பாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த 12 லாரிகள் பிடிபட்டன. 8 டிரைவர்கள் தங்களது லாரிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட லாரி டிரைவர்களான ஆந்திர மாநிலம் காரூரை சேர்ந்த சதீஷ் (வயது 26), கூடூரை சேர்ந்த சாய் (22), சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்த திருமலை (32), பெரியபாளையத்தை அடுத்த வேளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (23) ஆகியோரை கைது செய்தனர். 12 மணல் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல கும்மிடிப்பூண்டி சிப்காட் எல்லைக்கு உட்பட்ட பெத்திக்குப்பம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த 10 லாரிகள் பிடிபட்டன. இதில் 7 லாரி டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமாபுரத்தை சேர்ந்த திருமலை, செங்குன்றம் அடுத்த பாலவாரிமேடு கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் (44), கவரைப்பேட்டையை அடுத்த அமிர்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (27) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் மணலுடன் 10 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story