கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் கண்மாய் அருகில் அரசுக்கு சொந்தமான 1¼ ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பெண்கள் கழிப்பறை மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் கிரியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கோவில்பட்டி அருகே உள்ள சென்னையம்பட்டி கண்மாயில் இருந்து கடலையூர் கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். வாய்க்கால் கரைகளில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அ.தி.மு.க. கிளை செயலாளர் காளிதாஸ், பெரியசாமி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் கிரியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், வாய்க்கால் கரையை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story