8 மாதம் மின்சாரம் இல்லாமல் தவித்த வியாபாரிக்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு


8 மாதம் மின்சாரம் இல்லாமல் தவித்த வியாபாரிக்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 26 Aug 2018 11:47 PM GMT (Updated: 26 Aug 2018 11:47 PM GMT)

8 மாதங்களாக மின்சாரம் இல்லாமல் தவித்த வியாபாரிக்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க மின்வாரியத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புனே,

புனே தவுன்ட் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர ஷா. இவர் தவுன்ட் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது கடைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மகேந்திர ஷா மாநில மின் வாரியத்தில் புகார் அளித்தார். ஆனால் மின்வாரிய ஊழியர்களால் கோளாறை சரிசெய்ய முடியவில்லை.

இதையடுத்து மின்சார வசதியில்லாமல் மகேந்திர ஷா பேட்டரி விளக்கு மூலம் கடையை நடத்தி வந்தார். மின் இணைப்பு இல்லாத போதும் அவர் மாதந்தோறும் குறைந்தபட்ச மின் கட்டண தொகையை செலுத்தி வந்தார்.

பல முறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் கோளாறை சரி செய்து மீண்டும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் மின்வாரியம் மகேந்திர ஷாவிற்கு அதிகளவு மின் கட்டணத்தை விதித்தது. மின் இணைப்பே இல்லாமல் அதிக கட்டணம் வந்திருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் மின்வாரியத்திடம் முறையிட்ட போது உரிய பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கோளாறை சரிசெய்யாமல் 8 மாதங்களுக்கு மேல் மின்சாரம் இன்றி வியாபாரியை தவிக்கவிட்டதற்காக அவருக்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. 

Next Story