காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 30 Aug 2018 4:30 AM IST (Updated: 30 Aug 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இதன் எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 120.05 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 119.82 அடியாக குறைந்தது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை நீடித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரத்து 800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 800 கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இதில் 6 ஆயிரம் கனஅடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்கும், 800 கனஅடி நீர் கால்வாய் பாசனத்துக்கும் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story