திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் நவம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கும்


திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் நவம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கும்
x
தினத்தந்தி 30 Aug 2018 11:00 PM GMT (Updated: 30 Aug 2018 7:51 PM GMT)

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதையில் பணிகள் நிறைவு பெற்று நவம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கும் என திருச்சி மண்டல ரெயில்வே பொறியாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்,

தமிழகத்தின் கடைசி மீட்டர்கேஜ் பாதையாக திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதை இருந்து வந்தது. இந்த நிலையில் திருவாரூர்-காரைக்குடி வரையிலான மீட்டர்கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றிட மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் பட்டுக்கோட்டை- காரைக் குடி இடையிலான 72 கிலோ மீட்டர் தூர மீட்டர்கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது.

இதன் பின்னர் அக்டோபர் 19-ந் தேதி திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வரை இயங்கி வந்த மீட்டர்கேஜ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து திருவாரூர்-பட்டுக்கோட்டை வரையிலான 74 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான அகல ரெயில் பாதையில் பணிகள் முடிவடைந்து ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வரையிலான வழித்தடங்களிலும் செம்மண் சமப்படுத்தி ஜல்லி நிரப்பி சிமெண்டு கட்டைகள் அமைக்கப்பட்டு தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர்-திருநெல்லிக்காவல் வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. முன்னதாக திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் என்ஜின் மாலை அணிவித்து சோதனை ஓட்டம் தொடங்கியது.

இந்த சோதனை ஓட்டத்தில் திருச்சி மண்டல ரெயில்வே இணை முதன்மை பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், திருவாரூர் ரெயில்வே மேலாளர் ராஜன், அதிகாரிகள் தர்மலிங்கம், வினோத்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெயில் பாதை பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் திருச்சி மண்டல ரெயில்வே இணை முதன்மை பொறியாளர் ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதையில் திருநெல்லிக்காவல் ரெயில் நிலையம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த வாரம் கொல்கத்தாவில் இருந்து புதிய ரெயில்கள் கொண்டு வரப்பட்டு திருவாரூர்-திருநெல்லிக்காவல் வரை சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரெயில் சேவை தொடங்கும். ரூ.120 கோடி மதிப்பிலான திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. நவம்பருக்குள் பணிகள் நிறைவடைந்து சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story