வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்


வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2018 5:39 AM IST (Updated: 7 Sept 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுவையில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகபடியான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். புதுச்சேரி கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியாக உள்ளது. எனவே நீர் தேங்காமல் வாய்க்கால் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைநீரை சேமிக்கும் ஏரி, குளங்களில் தூர்வாரும் பணி சரியாக நடைபெறவில்லை. கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக் கொண்டு உள்ளது. இவைகள் அகற்றப்பட வேண்டும். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறையின் வேலை திருப்திகரமாக இல்லை. நீர்நிலைகள் தூர்வாரும் பணி மிக முக்கியமானது. தூர்வாரி அங்கு மழைநீர் சேமிக்கப்பட வேண்டும்.

புதுவையில் தொடர்ந்து 10 நாட்கள் மழை பெய்தால் கட்டிடங்கள் அவலமான நிலைக்கு சென்று விடுகின்றன. இது அந்த கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கும் தெரிவதில்லை. அரசு கட்டிடங்களும் சில அதுபோன்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் உள்ள கட்டிடங்களை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய அனைத்தும் இணைந்து கன மழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவரை என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், ஜவகர், பார்த்திபன், சுந்தரவடிவேலு, தேவ்ஸ்சிங், அலிஸ் வாஸ், புதுச்சேரி கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, காரைக்கால் கலெக்டர் கேசவன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மற்றும் பல்வேறு அரசுத்துறை இயக்குனர்கள், தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story