வாழைப்பழ குடோன் உள்பட 15 கடைகள் எரிந்து நாசம்
நத்தத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் வாழைப்பழ குடோன் உள்பட 15 கடைகள் எரிந்தன. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் கடைவீதியில் வாழைப்பழ குடோன் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இந்த குடோன் மற்றும் அருகில் இருந்த கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்த நத்தம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வாழைப்பழ குடோன் உள்பட 3 கடைகளும் அங்கிருந்த பொருட்களும் தீயில் கருகின.
இதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் நத்தம் மூன்றுலாந்தர் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது தையல்கடை, ராமர் என்பவரது ஓட்டல், அசன் என்பவரது செல்போன் கடை உள்பட 11 கடைகளில் தீப்பிடித்து எரிந்தது. இதேபோல் பெரிய கடைவீதியிலுள்ள காதர்பாட்சா என்பவரது புரோட்டா கடையும் திடீரென தீப்பிடித்தது.
இதுகுறித்து தகவலறிந்த நத்தம், கொட்டாம்பட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த இந்த தீ விபத்துகளில் வாழைப்பழ குடோன் உள்பட 15 கடைகளில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு கோபால், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், தாசில்தார் ஜான்பாஸ்டின் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ., நத்தம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் கண்ணன்உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
யாரோ மர்மநபர்கள் வாழைப்பழ குடோன் உள்பட கடைகளுக்கு தீ வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த தீ விபத்துக்கு காரணமான மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் நத்தத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story