நடைபயிற்சி சென்ற ஆசிரியரிடம் செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது


நடைபயிற்சி சென்ற ஆசிரியரிடம் செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Sep 2018 9:30 PM GMT (Updated: 11 Sep 2018 9:27 PM GMT)

வத்தலக்குண்டுவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

வத்தலக்குண்டு, 


வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் ஸ்டேட் பாங்க் காலனி அருகே செல்போனில் பேசிக்கொண்டே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். உடனே ஜாபர்சாதிக் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏறி அவர்களை விரட்டி சென்றார்.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் எதிரே வருவதை கண்ட செல்போன் திருடர்கள் பெத்தானியபுரம் பகுதிக்குள் புகுந்தனர்.

பெத்தானியபுரத்தில் போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பட்டிவீரன்பட்டி செல்லும் குறுக்கு ரோடு வழியாக சென்று கன்னிமார் கோவில் அருகே அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பெரும்பாறையை சேர்ந்த விஜய் (வயது 25), மணிமுத்து (21) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் ஜாபர்சாதிக் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். செல்போன் திருடர்களை உடனே விரட்டி பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இந்த சம்பவத்தால் வத்தலக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story