இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்


இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Sept 2018 4:00 AM IST (Updated: 18 Sept 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் உள்ள 10 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

தூத்துக்குடியில் இருந்து கடந்த மாதம் 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று நீர்கொழும்பு சிறையில் வைக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 8 மீனவர்களுக்கும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல ராமேசுவரம் தெற்கு கரையூர் பகுதியை சேர்ந்த ராமராஜன், வினோத் ஆகிய 2 பேர் கடந்த ஜூலை 14–ந்தேதி தெர்மாகோல் மூலம் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் காவல் நீட்டிப்பு செய்ததை தொடர்ந்து தற்போது 10 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

மேலும் அரசுடைமையாக்கப்பட்ட 3 படகுகள் குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். கலெக்டர் பேச்சுவார்த்தையின் பேரில் இந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதுதொடர்பாக மத்திய–மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே உடனடியாக 10 மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க மத்திய–மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த மீனவர்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ், எமரிட், சேசு, சகாயம் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story