அவினாசி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம்: பொதுமக்கள் சாலைமறியல் வீடு புகுந்து தாக்கிய 10 பேர் கைது


அவினாசி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம்: பொதுமக்கள் சாலைமறியல் வீடு புகுந்து தாக்கிய 10 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2018 4:15 AM IST (Updated: 19 Sept 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக வீடுபுகுந்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வீடுபுகுந்து தாக்கியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சி தொட்டக்கலாம்புதூரில் 200–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரின் அருகே கானூரும் உள்ளது. இந்த இரண்டு ஊரை சேர்ந்த ஒரு சிலருக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கானூரை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு மரக்கட்டை, சைக்கிள் செயின் ஆகியவற்றுடன் தொட்டக்கலாம்புதூருக்குள் புகுந்து அங்கிருந்த வீடுகளில் இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீடுகளின் மேற்கூரை சேதப்படுத்தப்பட்டதோடு, ஒரு மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இந்த தாக்குதலில் ஒரு தரப்பை சேர்ந்த பிரதீப் (வயது 33), ரங்கசாமி (30), குப்புசாமி (55), சாந்தாமணி (43), குமார் உள்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களை உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும்போது ‘‘ வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும், இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு போலீசார் இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து நேற்றுகாலை 10 மணிக்கு தொட்டக்கலாம்புதூரை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருவலூர் வந்து திருப்பூர்–மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவினாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முடிவில் பிரச்சினைக்குரிய நபர்களை கைது செய்வதாக உறுதி கூறியபின்பு மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர். சாலை மறியலால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து வீடு புகுந்து தாக்கியதாக கவுதம் (22), திருப்பதிசாமி (41), மயில்சாமி (24), ஆறுச்சாமி (38), ஆறுமுகம் (36), விஸ்வநாதன் (24), செந்தில்குமார் (57), நாகராஜன் (29) உள்பட 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 27 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story