மாப்பிள்ளையை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


மாப்பிள்ளையை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 19 Sept 2018 3:00 AM IST (Updated: 19 Sept 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையை பிடிக்காததால் அவரை கொலை செய்த தொழிலாளிக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,


தேனி மாவட்டம் கம்பம் வடக்குபட்டி நேதாஜி நகரை சேர்ந்த சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு ஜெயபாண்டியன் (வயது 29) என்ற மகனும், மீனா (22) என்ற மகளும் இருந்தனர். ஜெயபாண்டியன் கூலித்தொழிலாளி. கடந்த 2012-ம் ஆண்டு மீனாவுக்கு திருமணம் செய்வதற்காக அவருடைய தாயார் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

இதில், பெரியகுளம் தென்கரை ஜல்லிப்பட்டியை சேர்ந்த அழகுசாமி மகன் சரவணன் (29) என்பவரை மீனாவின் உறவினர்களுக்கு பிடித்துப் போனது. சரவணன் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மாப்பிள்ளை பிடித்துப்போனதால் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்தனர். சரவணன் தனது குடும்பத்தினருடன் மீனாவை நிச்சயம் செய்வதற்காக வடக்குப்பட்டிக்கு சென்றார். இதற்கிடையே மீனாவின் அண்ணன் ஜெயபாண்டியன் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், வேறு மாப்பிள்ளைக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனாலும், சரவணனுக்கே மீனாவை திருமணம் செய்து வைக்க அவருடைய தாயார் முடிவு செய்தார்.

நிச்சயதார்த்தம் நடந்து கொண்டு இருந்தபோது யாரும் எதிர்பாராத நிலையில், சரவணனை ஜெயபாண்டியன் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் மார்பு, வயிற்றுப் பகுதியில் கத்திக்குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கு இருந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜெயபாண்டியன் தப்பி ஓடிவிட்டார்.

தப்பி ஓடிய ஜெயபாண்டியனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கின் இறுதி விசாரணை நடந்து முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார். கொலை செய்த குற்றத்துக்கு ஜெயபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜெயபாண்டியனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story