திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கண்காணிப்பாளரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் வழிப்பறி


திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கண்காணிப்பாளரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் வழிப்பறி
x
தினத்தந்தி 20 Sept 2018 3:57 AM IST (Updated: 20 Sept 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கண்காணிப்பாளரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 400–ஐ வழிப்பறி செய்த வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி.நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 36). இவர் கல்லாங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் ராஜா டாஸ்மாக் கடையில் இருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 400–ஐ ஒரு பையில் எடுத்துக்கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இவர் வெள்ளியங்காடு பிரதான ரோடு வளைவு பகுதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த வாலிபர்கள் திடீரென ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளனர். இதில் நிலைதடுமாறிய ராஜா பணப்பையுடன் கீழே விழுந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த வாலிபர்கள் திடீரென்று ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணப்பையை பறித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.

இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் ராஜாவிடமும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினார்கள். இந்த வழிப்பறி சம்பவத்தில் நன்கு தெரிந்த நபர்களே ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும், அந்த நபர்களை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நூதனமுறையில் மர்ம நபர்கள் பணத்தை வழிப்பறி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story