அமராவதி ஆற்றில் பல கோடி ரூபாய் மதிப்பில் மணல் கொள்ளை - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.


அமராவதி ஆற்றில் பல கோடி ரூபாய் மதிப்பில் மணல் கொள்ளை - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 22 Sep 2018 12:00 AM GMT (Updated: 21 Sep 2018 8:06 PM GMT)

அமராவதி ஆற்றில் பலகோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை நடக்கிறது என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

மடத்துக்குளம்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று 2–வது நாள் பயணத்தை மடத்துக்குளத்தில் தொடங்கினார்.

மடத்துக்குளத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:–

தற்போதைய அரசு ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அவருடைய பாதைகளில் நடக்கவில்லை. ஜெயலலிதா அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர். இதனாலேயே தொடர்ந்து நீங்கள் ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்து கொண்டு இருந்தீர்கள். மூச்சுக்கு மூச்சு இது ஜெயலலிதாவின் ஆட்சி, இது ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்லும் இவர்கள், ஜெயலலிதாவின் பாதையில் நடக்கிறார்களா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற வேண்டும் என்பதற்காக அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. விவசாயிகள் மற்றும் பொது மக்களை பாதிக்கின்ற ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் ஜெயலலிதா இருந்திருந்தால் நமது தமிழகத்திற்கு வந்திருக்காது.

மாணவ–மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வது கனவாக ஆகிவிடுமோ என்று எண்ணும் அளவிற்கு மத்திய அரசு ‘நீட்’ தேர்வை கொண்டு வந்துள்ளது. இதில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வருவதற்காக ஜெயலலிதா போராடினார். ஆனால் தற்போதைய அரசு இதை ஆதரித்து வருகிறது.

மத்திய அரசு சொல்லும் திட்டங்களை செயல்படுத்தும் எடுபிடி அரசாக தற்போதைய தமிழக அரசு இருந்து வருகிறது. தற்போது முதல்–அமைச்சராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி அல்ல. மத்திய அரசின் எடுபிடி பழனிசாமியாகவே இருந்து வருகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் எம்.ஜி.ஆர். மூலம் உருவாக்கப்பட்டு, 30 ஆண்டுகள் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட ஒரு இயக்கம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் தற்போது துரோகிகளின் கையிலே சிக்கிக்கொண்டு இருக்கிறது. இதை மீட்டெடுக்க ஜெயலலிதாவின் உண்மை தமிழர்களாகிய நாங்கள் போராடி வருகிறோம்.

இதை உணர்ந்துதான் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பவர்களை தோற்கடித்து சுயேச்சையாக போட்டியிட்ட என்னை குக்கர் சின்னத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபித்துள்ளது. வருகிற திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தேர்தல்களிலும் உண்மையான தொண்டர்கள் நமது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வார்கள்.

நாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மடத்துக்குளம் பகுதியில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியை நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மடத்துக்குளம் பகுதி ஏழை மாணவ, மாணவிகளின் வசதிக்காக புதிய பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தரப்படும். பொதுமக்களின் நலன் கருதி மின்மயானம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மடத்துக்குளம் தாலுகா ரெயில்வே நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கணியூரில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:–

இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக மக்களின் நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. குறிப்பாக 69 சதவீத சமூக நீதி இட ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு பெற்றுத்தந்தார். மத்தியில் ஆளுகின்ற பாரதீய ஜனதா கட்சி இந்தியாவில் 24 மாநிலங்களில் நேரடியாகவும் தமிழ்நாட்டில் தற்போதைய அ.தி.மு.க அடிமைகள் மூலமாகவும் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது.

மத்தியில் உள்ளவர்கள் சொன்னால் யாரையும் கைது செய்வோம். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்ன பேசினாலும், அது நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும், நீதிமன்றமே சொன்னாலும் நாங்கள் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய மாட்டோம் என்கிற நிலைப்பாடு தற்போதைய அரசில் இருந்து வருகிறது.

ஆட்சியாளர்களின் மீது உள்ள வழக்குகளை நீதிமன்றம் விசாரித்தால் இது ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வார்கள். இதனால் 90 சதவீதத்திற்கும் மேல் தொண்டர்கள் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளை அழிக்க வேண்டும், இயற்கை வளத்தை சுரண்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு வருகிறது. தற்போது முதல்–அமைச்சர் மீதும், துணை முதல் அமைச்சர் மீதும், கொங்கு மண்டல அமைச்சர்கள் மீதும் புற்றீசல் போல பல்வேறு ஊழல் புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இங்கு அமராவதி ஆற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை செய்வது யார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். இதையெல்லாம் தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க, எங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story