ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் பழுதடைந்த தொங்கு பாலத்துக்கு பூட்டு


ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் பழுதடைந்த தொங்கு பாலத்துக்கு பூட்டு
x
தினத்தந்தி 21 Sep 2018 10:00 PM GMT (Updated: 21 Sep 2018 9:37 PM GMT)

ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் பழுதடைந்த தொங்கு பாலத்துக்கு பூட்டு போடப்பட்டு உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், கடமான்கள், மலபார் அணில்கள், நீலகிரி லங்கூர் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அங்கு உயரமாக வளர்ந்து இருக்கும் மரங்களில் அரிய வகை பறவைகள் காணப்படுகிறது. நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில், கேர்ன்ஹில் வனப்பகுதி சூழல் சுற்றுலாவாக செயல்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவை சுற்றிலும் வனவிலங்குகள் உள்ளே நுழையாத வண்ணம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பூங்கா வளாகத்தில் சிறுத்தைப்புலி, புலி, கடமான், காட்டெருமை ஆகிய வனவிலங்குகளின் உருவ பொம்மைகள் தத்ரூபமாக காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள பொருள் விளக்க மையத்தில் நீலகிரி வரையாடு, புள்ளி மான், சிறுத்தைப்புலி, நீலகிரி லங்கூர் குரங்கு ஆகிய வனவிலங்குகளது மாதிரிகள் பதப்படுத்தி வைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள வனவிலங்குகள் மற்றும் மாதிரிகளை கண்டு ரசித்து செல்கிறார்கள். அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

கேர்ன்ஹில் வனப்பகுதிக்குள் 1½ கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த மரங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லலாம். அங்கு காட்சி முனை கோபுரத்தில் இருந்து பசுமையான வனப்பகுதிகள், வனவிலங்குகள் உயரமான மரங்களை கண்டு ரசிக்கலாம். மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மரங்களுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 மீட்டர் தூரம் உள்ள தொங்கு பாலத்தில் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் ஏறி, அதன் மேல் அசைந்தாடியபடி நடந்து சென்று மற்றொரு புறத்தில் இறங்கலாம். அவர்கள் நடந்து செல்லும் வகையில் அடியில் மரத்தால் ஆன பலகைகள் பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பலகைகள் பழுதடைந்து கீழே விழுந்தன. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தொங்கு பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் அதன் இருபுறங்களிலும் உள்ள கதவுகளில் பூட்டு போடப்பட்டு உள்ளது. அதன் காரணமாக கேர்ன்ஹில் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, பழுதடைந்து காணப்படும் தொங்கு பாலத்தை சீரமைத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story