பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயம்


பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Sep 2018 10:00 PM GMT (Updated: 26 Sep 2018 7:12 PM GMT)

தர்மபுரி அருகே பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். இதனால் தரமான பஸ்களை இயக்க கோரி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு மகளிர் கல்லூரி செயல்படுகிறது. இதேபோல் பைசுஅள்ளி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி-காரிமங்கலம் இடையே உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளின் வசதிக்காக ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் தினமும் 75-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் இருந்து காரிமங்கலத்திற்கு கல்லூரி மாணவிகள் செல்லும் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் குண்டல்பட்டி அருகே சென்றபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் அந்த டவுன் பஸ் சாலையிலேயே நின்றது. டயர் வெடித்தபோது பஸ்சின் உள்பகுதியில் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவிகள் மற்றும் நின்றிருந்த மாணவிகள் என 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் டயர் வெடித்த டவுன் பஸ்சில் பயணம் செய்த பிற மாணவிகள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமான டவுன் பஸ்களை இயக்க வேண்டும், மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடவும் முயன்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதிகோன்பாளையம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதியளித்தனர். இதனால் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story