கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:05 PM GMT (Updated: 1 Oct 2018 10:05 PM GMT)

முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். இதில் அனைத்துத்துறை முதன்மை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தநிலையில் திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சிலரை மட்டும் மனு அளிப்பதற்காக உள்ளே அனுமதித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு கிணறும் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டன. எனவே கடந்த 4 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் மாதம் இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லாததால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் எங்கள் பகுதியில் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து, கிணற்றையும் தூர்வாரினால் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

தருமத்துப்பட்டியை சேர்ந்த நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தலையில் மண்சட்டியை சுமந்தவாறு மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் நூறு நாள் வேலைக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.

ஒரு குறிப்பிட்ட ஆட்டோவில் செல்வதை தவிர்த்ததால், அதற்கு காரணம் எங்களுடன் வேலை பார்க்கும் ஜெயந்தி என நினைத்து அவரை ஆட்டோ டிரைவர் தாக்கி பிளேடால் கையை கீறி விட்டார். இதுகுறித்து அவருடைய உறவினர்களிடம் கூறிய போது, அவர்கள் எங்களை சாதியை கூறி தகாத வார்த்தைகளால் பேசினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

நிலக்கோட்டை அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 1,500 பேர் வசித்து வருகிறோம். அருகே உள்ள குல்லலக்குண்டு பகுதியில் சுமார் 1,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த 2 ஊருக்கும் சேர்த்து ஒரு சுடுகாடு மட்டுமே உள்ளது. எரிமேடை இல்லாததால் பிணத்தை முழுமையாக எரிக்க முடியவில்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே எரிமேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

திண்டுக்கல் அருகே உள்ள ஜம்புலியம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உடையகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தூர்வாரும் பணிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், மறுகால் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை இன்னும் சரிசெய்யவில்லை. விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால், அந்த பணியை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இதேபோல் அடிப்படை வசதிகள், வீட்டுமனைப்பட்டா உள்பட பல கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். 

Next Story