மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் உள்ள அரங்கில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்தார். அவரது வழியில் இந்த அரசின் தொடர் முயற்சியின் காரணமாக மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு, தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. விரைவில் பிரதமரை சந்தித்து மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி.
தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை பெற்று அதற்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு அமைச்சர்தான் காரணம் என்று அதிகாரி கூறியது தவறான கருத்து. இது குறித்து சட்டமன்றத்தில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை அதிகமாக பெய்யும் போது வெள்ளம் வரும். அது இயற்கை. இந்தோனேஷியாவில் சுனாமி வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இயற்கை என்பது எப்போது வரும் என்று யாரிடமும் சொல்லிவிட்டு வராது. தமிழக அரசு வெள்ள எச்சரிக்கையை மக்களுக்கு தெரிவித்து வருகிறது. நாங்கள் திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் தனியாகத்தான் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நடிகர் கருணாஸ் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருகிறார் என்றால், சட்டம் என்ன செய்யும் என்று உங்களுக்கு தெரியும்.
டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த போது 8 முறை அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர்கள். இது அ.தி.மு.க.வின் கோட்டை. எனவே இந்த தொகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு சாதகமாகத்தான் இருப்பார்கள்.
மதுரை மாவட்டம் ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே இங்கு தொட்டது துலங்கும். அந்த அடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் தேர்தலுக்கான கட்சி பணிகளை இங்கு தொடங்கி உள்ளோம்.
தேர்தல் தேதி அறிவித்த பின்னர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களை அறிவிப்போம். திருப்பரங்குன்றம் போன்று திருவாரூரிலும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. தி.மு.க.தான் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு முடிந்த உடன் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. 93 சதவீதம் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பெரும்பான்மையான மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. மேலும் இரு பெரும் தலைவர்கள் ஆசியோடு இந்த அரசு எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதால் தேசிய அளவில் பல்வேறு துறைகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்கிறீர்கள். தமிழகத்தில் 8 கோடி மக்கள் உள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், கருத்து கூறலாம். முதலில் விஜய் கட்சியை ஆரம்பிக்கட்டும், பார்ப்போம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story