நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - வி.ஐ.டி.வேளாண் கண்காட்சியில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு


நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - வி.ஐ.டி.வேளாண் கண்காட்சியில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2018 4:25 AM IST (Updated: 9 Oct 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க நதிநீர் இணைப்புதிட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வி.ஐ.டி.யில் நடந்த வேளாண் கண்காட்சியில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

வேலூர்,

வி.ஐ.டி.யில் உழவர் களஞ்சியம் என்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணைத் துணைவேந்தர் எஸ்.நாராயணன் வரவேற்றார். கண்காட்சியை, ஆப்பிரிக்க ஆசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் பொது செயலாளர் வாசிபி ஹசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

விவசாயத்திற்கு வி.ஐ.டி. முன்னுரிமை அளித்து வருகிறது. முதற்கட்டமாக வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக வேளாண் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் உழவர் களஞ்சியம் என்ற நிகழ்ச்சியை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்திய நாட்டின் மக்கள் தொகை 134 கோடியாகும், இது உலக மக்கள் தொகையில் 18 சதவீதமாகும். நாட்டில் 8.5 லட்சம் பேர் விவசாய தொழிலை கைவிட்டுள்ளனர். ஏரிகளையும், பாலாற்று கால்வாய்களையும் தூர் எடுத்து சீரமைத்து வைத்தாலே மழைக்காலங்களில் வரும் நீரை சேமித்து வைத்து மழை இல்லாத காலங்களில் பயன்படுத்த முடியும். 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளையும் சேர்க்க வேண்டும். படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.

காவிரி பிரச்சினைக்காக ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டும் குறைந்த அளவு நீரே கிடைத்துள்ளது. மழைக்காலங்களில் கோதாவரி ஆற்றின் நீர் கடலில் கலக்கின்றது. இதனை தடுக்க நதிகள் இணைப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் மாநிலத்தில் உள்ள ஆறுகளையாவது இணைக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்து பேசினார். அப்போது “உழவர் களஞ்சியம் நிகழ்ச்சி விவசாயிகளிடையே புதிய சாகுபடியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றினை சுத்தம் செய்வதற்காக வி.ஐ.டி. கிரீன் பாலாறு திட்டத்தினை கொண்டுவந்து பாலாற்றினை சுத்தம் செய்து வருகிறது. இதனால் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க ஆசியா ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் பொது செயலாளர் வாசிபி ஹசன் பேசுகையில், “தற்போது உணவு உற்பத்தி போதுமான அளவில் இல்லை. எனவே இயற்கை வளத்தினை பயன்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்கி அதனை பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பாக உள்ளது.

ஒரு நாட்டின் நிலையான ஊரக வளர்ச்சியில் விவசாய தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி தரும் பணியில் ஆப்பிரிக்கா ஆசியா ஊரக வளர்ச்சி அமைப்பு ஈடுபட்டுள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைவேந்தர் ஆனந் ஏ.சாமுவேல், நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் சி.ஆர்.சுந்தரராஜன், வி.ஐ.டி. வயல் இயக்குனர் பாபு ஆகியோரும் பேசினர்.

உழவர் களஞ்சியம் வேளாண் கண்காட்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ப்பு, வேளாண் சார்ந்த தொழில் உள்ளிட்டவைகள், அரசு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு வேளாண் கடன் வழங்கும் வங்கிகள், வேளாண் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட 112 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று (செவ்வாய்க்கிழமை) வேளாண் நிபுணர்கள், பேராசிரியர்கள் முன்னோடி விவசாயிகள் பங்கேற்கும் வேளாண் கருத்தரங்கம் நடைபெறுகிறது.


Next Story