அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை: ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட முயற்சி


அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை: ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட முயற்சி
x
தினத்தந்தி 11 Oct 2018 10:45 PM GMT (Updated: 11 Oct 2018 6:51 PM GMT)

கோட்டூர் அருகே அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள இலுப்பூர் கிராமத்தில் அனைத்து குடிநீர் பம்புகளையும் சீரமைக்க வேண்டும். செருவாமணி ஊராட்சிக்கு உட்பட்ட சாலைகளை பழுது நீக்க வேண்டும். கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்வதற்கு வசதியாக மன்னார்குடியில் இருந்து சேந்தங்குடி வரை இயக்கப்படும் பஸ்சை திருநெல்லிக்காவல் வரை நீட்டிக்க வேண்டும்.

பழுதான தெரு விளக்குகளை சீரமைக்கவும், செருவாமணி ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செருவாமணி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோசிமணி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் பி.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் சந்துரு, ஒன்றிய தலைவர் சதீஸ், ஒன்றிய துணை செயலாளர் பாரதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனோஜ், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் அலுவலகத்துக்கு பூட்டு போட போராட்டக்காரர்கள் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பக்கிரிசாமி, தமிழ்ச்செல்வன், வடபாதிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வாரத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கும் பூட்டு போடும் முயற்சியை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story