சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஊர்வலம்


சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:00 PM GMT (Updated: 14 Oct 2018 8:16 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும் ஊர்வலம் நடந்தது.

முருகபவனம், 

அனைத்து வயதுள்ள பெண்களும் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனை எதிர்த்தும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் அகஸ்தீஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் நேற்று நடந்தது. திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் இருந்து தொடங்கிய அந்த ஊர்வலம் தலைமை தபால் நிலையம், பஸ்நிலையம் உள்பட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நத்தத்தில் இந்து முன்னணி மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ்நிலையம், மூன்றுலாந்தர், மாரியம்மன் கோவில், அவுட்டர் சாலை, கோவில்பட்டி வரை சென்று திரும்பியது. இதற்கு இந்து முன்னணி வடக்கு ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி, மாவட்ட துணைத்தலைவர் செல்லமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் செல்வராஜ் மற்றும் அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story