விருதுநகர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் மயானத்தில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள்; கிராம மக்கள் எதிர்ப்பு
விருதுநகர் அருகே பொது மயானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள ரோசல் பட்டி பஞ்சாயத்தில் பாண்டியன்நகர், குமராபுரம், ரெங்கநாதபுரம், முத்தாள்நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு பொருட்களை பஞ்சாயத்து நிர்வாகம் குமராபுரம் கண்மாயில் கொட்டிவந்தது. இந்நிலையில் கண்மாயில் குப்பைகளை கொட்டமுடியாதநிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகம் அங்குள்ள பொது மயானத்தில் குப்பைகளை கொட்ட தொடங்கி உள்ளது. இதனால் சுற்றி உள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நோய் தொற்று ஏற்படும் என்றும் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாயத்து நிர்வாகம் மயானத்தில் குப்பைகளை கொட்டி வருகிறது. அப்போது குப்பை கொண்டு செல்லும் வாகனத்தை மறித்த பொதுமக்களை எச்சரித்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு செய்யவேண்டுமே தவிர, குப்பை வாகனங்களை மறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
மாவட்ட நிர்வாகம் தூய்மைபணியில் தீவிரம் காட்டும் நிலையில் ரோசல்பட்டி பஞ்சாயத்தில் பொது மயானத்தில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.