அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் அறிவுரை


அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் அறிவுரை
x
தினத்தந்தி 4 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-05T02:48:38+05:30)

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அனுமதித்துள்ள நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் அறிவுறுத்தி உள்ளார்.

தர்மபுரி,

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அனுமதித்துள்ள நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பட்டாசு வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு சில விதிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. எனவே இந்த நேரங்களில் மட்டுமே தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க பொதுமக்கள் முன் வர வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்காமல் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்க வேண்டிய இடங்கள், கூரை வீடுகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றிக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

சிறுவர்கள், சிறுமிகள் பட்டாசுகளை வெடிக்கும் போது பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அனைக்கும் பொருட்டு தண்ணீர், மணல் போன்றவற்றை தேவையான அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை தடுக்கவும், உயர் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. விதிமுறைகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story