அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது இளம்பெண் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்


அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது இளம்பெண் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Nov 2018 4:45 AM IST (Updated: 6 Nov 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது இளம்பெண் திடீரென்று இறந்தார். அவரது சாவுக்கு தவறான சிகிச்சையே காரணம் என கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி 2-வது வார்டு உப்பு ஓடை பகுதியை சேர்ந்தவர் மாது. இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் வண்டிக்கு ஆட்களை அனுப்பும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி(வயது 29). இவர் ஆத்தூர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

மாதுவுக்கும், அம்சவள்ளிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்சவள்ளிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். நள்ளிரவு 11 மணி அளவில் அம்சவள்ளிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அம்சவள்ளிக்கு திடீரென உடல்நிலைக்குறைவு ஏற்பட்டது.

உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அம்சவள்ளியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அம்சவள்ளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அம்சவள்ளியின் கணவர் மாது மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இறந்த அம்சவள்ளியின் பிணத்தை அமரர் ஊர்தி மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு அம்சவள்ளியின் பிணத்துடன் வந்த அமரர் ஊர்தியை அவரது கணவர் மாது மற்றும் உறவினர்கள் தடுத்து நிறுத்தி அதன் முன்பு தரையில் உட்கார்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர்கள், நர்சுகளின் தவறான சிகிச்சை தான் அம்சவள்ளி மரணத்துக்கு காரணம் எனவும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கடும் கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமர்தலிங்கம், வான்மதி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் சேலம்-கடலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்சவள்ளிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை இன்குபேக்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தையை தவிக்க விட்டு விட்டு அம்சவள்ளி இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன் தலைமையில் பா.ம.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இறந்த அம்சவள்ளிக்கு நீதி வேண்டும். அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மீண்டும் காலை 9 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதன்பின்னர் ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், தாசில்தார் செல்வம், இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அம்சவள்ளி இறப்பு குறித்து அரசு கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பகல் 12 மணிக்கு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story