திருச்சியில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்


திருச்சியில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 4:30 AM IST (Updated: 9 Nov 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். நடிகர் விஜய் பதாகைகள் கிழித்து எறியப்பட்டன.

திருச்சி,

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் உள்ளிட்டவைகளை விமர்சித்து வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும் என்ற கருத்து அ.தி.மு.க.வினர் இடையே வலுத்துள்ளது.

இதனால் நேற்று தமிழகம் முழுவதும் சர்கார் திரைப்படம் ஓடும் தியேட்டர்களை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகள் கிழித்து எறியப்பட்டன.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சோனா-மீனா தியேட்டர்களில் சர்கார் திரைப்படம் ஓடுகிறது. நேற்று மாலை காட்சி படம் பார்ப்பதற்காக பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்றவாறு இருந்தனர். அப்போது தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்திட முடிவு செய்தனர். அதையொட்டி, அங்கு மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், முருகவேல் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் தியேட்டர் முன்பு நடிகர் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த சிறிய அளவிலான பதாகைகளையும் போலீசாரே அப்புறப்படுத்தினர்.

இந்தநிலையில் சரியாக மாலை 6.45 மணிக்கு திடீரென தியேட்டர் வளாகத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர் கண்டன குரல் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன், பகுதி செயலாளர் முஸ்தபா, மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் வக்கீல் ராஜ்குமார் மற்றும் தில்லைநகர் பகுதி இணை செயலாளர் அப்பாகுட்டி உள்பட திரளான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் திரைப்படம் எடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்திட வேண்டும் என்றும், வன்முறையை தூண்டும் வகையில் வசனங்கள் பேசி நடித்த நடிகர் விஜயை கைது செய்திட வேண்டும் என்றும், படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்கிட வேண்டும் என்றும் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால், தியேட்டர்கள் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அ.தி.மு.க.வினர் சிலர் கட்சி கொடியுடன் தியேட்டர் முன்பு திருச்சி மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விஜய் பதாகைகள் மீது ஏறினார்கள். பின்னர் அதை கிழித்து எறிந்தனர். சிலர் நீண்ட தடியால், பதாகையை குத்தி கிழித்தனர். போலீசார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சில நிமிடங்களில் பதாகைகளை அ.தி.மு.க.வினர் கிழித்தெறிந்து விட்டு கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுபோல திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ‘சர்கார்‘ திரைப்படம் ஓடும் ரம்பா-ஊர்வசி தியேட்டர்கள் முன்பு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சகாதேவபாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் அ.தி.மு.க.வினர் கிழித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேனர்களை தாங்களே அப்புறப்படுத்தி விடுவதாக விஜய் ரசிகர்கள் உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து திருச்சியில் சர்கார் திரைப்படம் வெளியாகி உள்ள 6 தியேட்டர்களின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story