ஜெயங்கொண்டத்தில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


ஜெயங்கொண்டத்தில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 Nov 2018 4:30 AM IST (Updated: 12 Nov 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடி யிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 59). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் அமைந்துள்ள சென்னீஸ்வரர் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் அருகில் உள்ள செல்லியம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடுபோய் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து செல்லியம்மன் கோவில் பூசாரியான ஜெயங்கொண்டம் நாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரனும்(60), பெரியசாமியும் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story