மக்கள் சேவையில் மாணவர் காங்கிரசார் ஆர்வம் காட்டவேண்டும்; அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல்
மக்கள் சேவையில் மாணவர் காங்கிரசார் ஆர்வம் காட்டவேண்டும். என, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
காரைக்கால்,
காரைக்கால் மார்க்கெட் வீதியில் உள தனியார் மண்டபத்தில் மாணவர் காங்கிரஸ் அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெம்சன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கல்யாணசுந்தரம், துணைதலைவர்கள் விக்ரம், ரவீந்தரன், இந்திரஜித், தமிழழகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, தேசிய பொறுப்பாளர் கிளிண்டன் சோழசிங்கராயர் மாணவர் காங்கிரசின் முக்கியத்துவம் குறித்து பேசினார். திருநள்ளாறு தொகுதி ஊடகப்பிரிவு தலைவர் பூபதி, 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று குறித்து பேசினார்.
தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:–
மாணவர் காங்கிரசார் கடினமாக உழைத்தால் அகில இந்திய அளவில் உயர் பதவிகளில் வரமுடியும். முன்னாள் பிரதமர் மறைந்த இந்திராகாந்தி தனது 12 வயதில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பை உருவாக்கி வெற்றிகண்டார். அதேபோல், இளம் வயதிலேயே மக்கள் சேவையில் மாணவர் காங்கிரசார் ஆர்வம் காட்டவேண்டும். குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளால் பலர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. அரசின் தவறுகளை மாணவர் காங்கிரசார் கிராமங்கள் தோறும் உரிய முறையில்எடுத்துசென்று மக்களுக்கு புரியவைக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.
தொடர்ந்து, இறுதியாக, மத்திய பா.ஜ.க. அரசின் பணமிழப்பு நடவடிக்கையால் இறந்துபோனவர்களுக்கு, அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், மாணவர் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் மோகனவேல், சந்திரமோகன், சோழசிங்கராயர், செல்வமணி, சேதுராமன், திருநள்ளாறு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ், சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.