செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி தூசியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் மயக்கம்


செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி தூசியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் மயக்கம்
x
தினத்தந்தி 17 Nov 2018 4:45 AM IST (Updated: 16 Nov 2018 6:38 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். தூசியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, வடமணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி (வயது 42), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (37). இவர்களின் மகள்கள் பிரியதர்ஷினி (15), பிரியாமணி (7), தமிழ்பிரியா (3). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களது மகள் பிரியாமணி அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். பலத்த மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறினர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர். இதில் சிறுமி பிரியாமணி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். இடிபாடுகளை சிக்கி படுகாயம் அடைந்த துளசி, லட்சுமி, பிரியதர்ஷினி, தமிழ்பிரியா ஆகியோர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துளசி மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி இறந்த பிரியாமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துளசி குடும்பத்தினரை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து பிரியாமணியின் தாயார் லட்சுமியிடம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் அரசால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.10 லட்சம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே ஏழாச்சேரி கிராமத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் சில பெண்கள் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வேலை செய்து கொண்டிருந்த சின்னகுழந்தை (70), அஞ்சலை (50), ஜோதிலட்சுமி (30) ஆகிய 3 பெண்கள் மீது மின்னல் தாக்கியது. இதனால் அவர்கள் காயம் அடைந்து மயங்கி விழுந்தனர்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போளூரிலும் பலத்த மழை பெய்தது. அப்போது போளூரை அடுத்த முக்குறும்பை கிராமத்தை சேர்ந்த சரவணன் என்ற கூலி தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட வில்லை.

இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story