கஜா புயல் எதிரொலி: சேலத்தில் பலத்த மழை


கஜா புயல் எதிரொலி: சேலத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 16 Nov 2018 10:40 PM GMT (Updated: 16 Nov 2018 10:40 PM GMT)

கஜா புயல் எதிரொலியாக சேலத்தில் பலத்த மழை பெய்தது. மழையின் போது பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

சேலம்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. சேலத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது லேசாக மழை பெய்து கொண்டே இருந்தது.

காலை நேரத்தில் மழை பெய்ததால் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இவர்களில் சிலர் நனைந்து கொண்டே செல்வதை பார்க்க முடிந்தது. பலர் குடைப்பிடித்தபடி சென்றனர். மாநகரில் சேலம் 4 ரோடு, 5 ரோடு, முள்ளுவாடி கேட், சன்னியாசிகுண்டு என பல இடங்களில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சிலர் அந்த பள்ளங்களில் தவறி விழுந்து காயமடைந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் அந்த இடங்களில் மெதுவாக சென்றனர். தொடர் மழை காரணமாக மாணவ, மாணவிகளின் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.

மழையினால் குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 36.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரின் வருமாறு:- ஆத்தூர்-26.4, வீரகனூர்-25, கெங்கவல்லி-20, பெத்தநாயக்கன்பாளையம்-16, ஏற்காடு-13, வாழப்பாடி-10, கரியகோவில்-10, ஆணைமடுவு-5, சேலம்-3.3, சங்ககிரி-2.1, எடப்பாடி-1 ஆகும்.


Next Story