உணவு, குடிநீர் கிடைக்காததால் விரக்தி: மீனவ கிராம மக்கள் சாலை மறியல்


உணவு, குடிநீர் கிடைக்காததால் விரக்தி: மீனவ கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 8:33 PM GMT)

உணவு, குடிநீர் கிடைக்காததால் விரக்தி அடைந்த மீனவ கிராம மக்கள் நாகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

‘கஜா’ புயல் கடந்த 15-ந் தேதி நள்ளிரவு நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. தீவிர புயலாக கரையை கடந்த கஜாவால், நாகையில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று 3-வது நாளாக நாகையில் மின் வினியோகம் இல்லை.

15-ந் தேதி இரவு நிவாரண முகாம்களுக்கு பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். நேற்று 3-வது நாளாக நிவாரண முகாம்களில் பொதுமக்கள் வாடினர். நாகை சாமந்தான்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாகை பகுதியில் உள்ள அன்னை சத்யா காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கியிருக்கும் நிலையில் உணவு, குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உணவு, குடிநீர் கிடைக்காத விரக்தியில் மீனவ கிராம மக்கள் நாகை-காரைக்கால் சாலையில் தெற்குபால்பண்ணைச்சேரி பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்துக்கு சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தார் ராஜா தலைமை தாங்கினார்.

அப்போது மீனவர்கள் சிலர் பஸ்சின் குறுக்காக படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர், உணவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக நாகை-காரைக்கால் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story