கோர்ட்டில் வழக்கு முடிந்ததும் 8 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


கோர்ட்டில் வழக்கு முடிந்ததும் 8 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:30 PM GMT (Updated: 18 Nov 2018 6:26 PM GMT)

கோர்ட்டில் வழக்கு முடிந்ததும் 8 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை பிரிவு ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.22 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து மேம்பாலம் அருகில் நடந்த விழாவில் ரூ.30 கோடியில் சேலத்தாம்பட்டியில் 496 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.1.74 கோடியில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்காக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தேன். சேலம் மாநகர் வளர்ந்து வரும் நகரம் ஆகும். காலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேம்பாலம் கட்டும் பணிகளை பரிசீலனை செய்து உங்களது ஆட்சிக்காலத்தில் சேலம் மக்களுக்கு விடிவுக்காலம் பிறக்கட்டும் என்று ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன்.

அதன்படி, சேலம் மாநகரில் திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர்.ரவுண்டானா, அணைமேடு, முள்ளுவாடி கேட், குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ்நிலையம், 4 ரோடு வரையிலும் உயர்மட்ட மேம்பாலம், 5 ரோட்டில் இருந்து ராமகிருஷ்ணா ரோடு வரையிலும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல், இரும்பாலை பிரிவு ரோட்டிலும் அதிக விபத்து நடப்பதாகவும், இதனால் அங்கு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ரூ.22 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, இன்றைய தினம் அது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் எந்த அளவுக்கு விரைவாக இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பாலமே ஒரு சாட்சி.

அதுமட்டுமில்லாமல், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் இளம்பிள்ளை செல்லும் சாலையிலும், அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியிலும் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்றார்போல் சாலை வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டில் வழக்கு முடிந்ததும் 8 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும். சேலத்தை சேர்ந்த நான் முதல்-அமைச்சராக இருப்பதால் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனக்கென்ன சேலத்தில் 10 தொழிற்சாலையா இருக்கிறது 8 வழிச்சாலை போடுவதற்கு?. சேலம் மட்டுமின்றி அருகில் உள்ள நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் சேலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இதனால் அந்த மாவட்ட மக்களுக்கு இந்த 8 வழிச்சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பசுமை சாலை அமையும் பட்சத்தில் 70 கிலோ மீட்டர் மிச்சமாகும். வாகனங்களுக்கு எரிவாயு மிச்சம் ஆகும். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பயண நேரம் குறையும். விபத்து ஏற்படாமல் நவீன தொழில்நுட்பத்தில் சாலை அமைக்கப்படும். பொதுவாக சாலை வசதிகளை மேம்படுத்தினால் புதிய, புதிய தொழிற்சாலைகள் வரும். அவ்வாறு புதிய தொழிற்சாலைகள் வந்தால் பொருளாதாரம் மேம்படும். பொருளாதாரம் மேம்பட்டால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும்.

எனவே, 8 வழிச்சாலையை சிலர் தேவையில்லாமல் எதிர்க்கிறார்கள். வெளிநாடுகளில் 8 வழிச்சாலை மட்டுமின்றி 10 மற்றும் 12 வழிச்சாலைகள் உள்ளன. 8 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் நபர்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது. எனவே, 8 வழிச்சாலை திட்டத்துக்கு பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட நல்ல திட்டங்கள் வரும்போது பொதுமக்கள் வரவேற்க வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தினால் அ.தி.மு.க. ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும் என்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களால் தற்போது கல்வியில் புரட்சி ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் புதிதாக 65 அரசு கலைக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், கால்நடை மற்றும் வேளாண் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் என பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சியானது கல்வியை மையமாக கொண்டிருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னேறும். தமிழகத்தில் இதுவரை 53 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த விஞ்ஞான உலகில் நமது மாணவ செல்வங்கள் சாதனை படைப்பார்கள்.

கல்வியை தொடர்ந்து சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக அரசு ஆஸ்பத்திரிகளில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த அளவுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் தற்போது 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தினமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கு என்ன செய்யலாம்? என்று மாநகராட்சி ஆணையாளருடன் ஆலோசனை செய்தோம். அப்போது, ஏற்கனவே உள்ள பழைய குழாய்களை மாற்றினால் தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் ஓராண்டில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, ராஜா, சின்னதம்பி, மருதமுத்து, முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் பாலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, நெடுஞ்சாலை நகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் கர்ணன், துணைத்தலைவர் தங்கராஜ், சூரமங் கலம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் தேவது, இணை செயலாளர் ஜங்சன் பாவா, வக்கீல் ஆறுமுகம், கேபிள் சக்திவேல், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ராஜமாணிக்கம், துணைத்தலைவர் குபேந்திரன், துணைப்பதிவாளர் நரசிம்மன், செயலாளர் செல்வராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story