கொட்டாரத்தில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு


கொட்டாரத்தில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Nov 2018 4:00 AM IST (Updated: 19 Nov 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாரத்தில் கல்லால் தாக்கி கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டார். 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஏசுவடியான் என்ற பஞ்சு (வயது 60). கட்டிட தொழிலாளி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

ஏசுவடியானுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெகன் (35), சதீஷ் (22) ஆகிய 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு ஏசுவடியான் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெகன், சதீஷ் அந்த வழியாக சென்றுள்ளனர்.

அப்போது, ஏசுவடியான் அவர்களை முறைத்து பார்த்துள்ளார். உடனே, ஜெகனும், சதீசும் அவரை தட்டிக்கேட்டனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவர்களுக்கிடையே மோதல் உருவானது. ஆத்திரமடைந்த ஜெகனும், சதீசும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் ஏசுவடியானை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயமடைந்த ஏசுவடியான் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை நடந்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 வாலிபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story