சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பிடிபட்டது 6 பெண்கள் சிக்கினர்


சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பிடிபட்டது 6 பெண்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:30 PM GMT (Updated: 25 Nov 2018 7:03 PM GMT)

சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். 5 பெண்களிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த சுயைன்யா பாத்திமா நாச்சியார்(வயது 42) என்ற பெண் வந்தார். சந்தேகத்தின்பேரில் அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவரது உள்ளாடைக்குள் 3 தங்க சங்கிலிகள், 4 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து 700 கிராம் எடை கொண்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சுயைன்யா பாத்திமா நாச்சியாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலையில் விமானம் வந்தது. அதில் இலங்கையை சேர்ந்த சீதாமாலினி(53), பாத்திமா பர்ஷானா(29), கல்யாணி குமுத லதா(46), விமலாவதி குமன்ஹமி(47), சித்திரெஜினா(46) ஆகிய 5 பெண்கள் வந்தனர்.

சந்தேகத்தின்பேரில் 5 பேரையும் தனிஅறையில் வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அவர்கள், தங்கள் உள்ளாடைகளுக்குள் 10 தங்க சங்கிலிகள், 8 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட ரூ.41 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள், இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 5 பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story