மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி அரசாணை நகலை எரித்து ஆசிரியர் கூட்டணி போராட்டம் 155 பேர் கைது
7–வது மற்றும் 8–வது ஊதியக்குழு அரசாணை நகலை எரித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நடத்திய போராட்டத்தில் 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில் தமிழக அரசின் 7–வது ஊதியக் குழுவின் அரசாணை எண் 234 மற்றும் 8–வது ஊதியக் குழுவின் அரசாணை எண் 303 ஆகியவற்றின் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அங்கு திரண்டனர். முன்னதாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.அ.முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் அ.அந்தோணிராஜ், பொருளாளர் வெங்கடபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ச.டேவிட்ராஜன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் ஜோதிபாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆசிரியர்கள் எரித்த அரசாணை நகலை அவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 110 ஆண் மற்றும் 45 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story