கண்மாய் நீரை தடுப்பதாக புகார்: கலெக்டர் காரை மறித்து விவசாயிகள் போராட்டம்


கண்மாய் நீரை தடுப்பதாக புகார்: கலெக்டர் காரை மறித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2018 5:45 AM IST (Updated: 27 Nov 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

கண்மாய் நீரை தடுப்பதாக புகார் கூறி, கலெக்டர் காரை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மதுரை,

இந்த ஆண்டு பருவமழை கைக்கொடுத்ததால் மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி உள்ளன. வறட்சி பகுதியான திருமங்கலம் பகுதியில் உள்ள கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. கூத்தியார்குண்டு மற்றும் நிலையூர் கண்மாய்கள் நிறைந்து கம்பிக்குடி கால்வாய் மூலம் பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு நீர் செல்கிறது. இந்த ஆலங்குளம் கண்மாய் சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ஆலங்குளம் கண்மாயும் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த மறுகால் பாயும் நீர், கால்வாய் மூலம் ஒ.ஆலங்குளம், விருசங்குளம், பெரிய உலகாணி உள்பட 6 கண்மாய்களை நிரப்பும். இதன்மூலம் அந்த பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயனடையும்.

இந்தநிலையில் பெரிய ஆலங்குளம் கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீரை வெளியேற்றவிடாமல் மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் மூடைகளை அகற்ற வலியுறுத்தி கடந்த 2 தினங்களுக்கு முன்பு விமான நிலைய சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை மணல் மூடைகள் அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது மணல் மூடைகளை அகற்றாவிட்டால் எங்களது ரே‌ஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைப்பதாக கூறினர். அதன்பின் அவர்கள் அங்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனாலும் விவசாயிகள் உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தி, அங்கேயே காத்திருந்தனர்.

இதற்கிடையில் கூட்டம் முடிந்தவுடன் கலெக்டர் நடராஜன், அலுவலகத்தில் இருந்து கிளம்பினார். அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகள் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் கலெக்டர், காரில் இருந்து இறங்கி அவர்களை அழைத்து கொண்டு அங்குள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றார். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story