திருச்சியில் 4 ஆயிரம் போலீசாருக்கு நலவாழ்வு பயிற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஐ.ஜி.வரதராஜு தொடங்கி வைத்தனர்


திருச்சியில் 4 ஆயிரம் போலீசாருக்கு நலவாழ்வு பயிற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஐ.ஜி.வரதராஜு தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 1 Dec 2018 5:12 AM IST (Updated: 1 Dec 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 4 ஆயிரம் போலீசாருக்கு நலவாழ்வு பயிற்சியை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஐ.ஜி. வரதராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருச்சி,

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் போலீசார் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் மன அழுத்தமின்றி சிறப்பாக பணியாற்றிட தமிழக காவல்துறை, பெங்களூரு தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு “நலவாழ்வுபயிற்சி” வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல்துறை மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு காவல் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கான நலவாழ்வு பயிற்சி தொடக்க விழா கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி தளவாய் உமையாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறுகையில், “போலீசாருக்கான நலவாழ்வு பயிற்சி திருச்சி மாநகரத்தில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக்காவல்படை முதலணி மற்றும் அனைத்து சிறப்பு பிரிவுகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் 3 ஆயிரம் பேருக்கு பல்வேறு குழுக்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக 40 பேர் கொண்ட குழுவுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் 3 நாட்கள் நடக்கும் பயிற்சியில் மன அழுத்தமின்றி எவ்வாறு பணியாற்றுவது?. யோகா உள்பட பல்வேறு அம்சங்கள் கற்றுத்தரப்படுகிறது. பயிற்சியின் 3-வது நாளில் போலீசாரின் குடும்பத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் இந்த பயிற்சியை அளிப்பார்கள்” என்று கூறினார்.

இதேபோல் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான நலவாழ்வு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜு பயிற்சியை தொடங்கி வைத்தார். திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலெட்சுமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 35 பேர் கொண்ட குழுவாக 24 குழுக்கள் வீதம் மொத்தம் 840 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து ஐ.ஜி. வரதராஜு கூறுகையில், “காவல்துறையினருக்கு பணிச்சுமையினால் மட்டுமே மனஅழுத்தம் வருவது கிடையாது. அவர்களுடைய குடும்ப சூழ்நிலையும் மனஅழுத்தம் ஏற்பட காரணமாக இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசாருக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார். திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் சேர்த்து மொத்தம் 3,840 போலீசார் பயிற்சி பெற உள்ளனர்.

Next Story