மதுரை ரெயில்வே கோட்டத்தில் இணைப்பு ரெயில் பெட்டிகளை பிரிப்பதில் விதிமீறல்; கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு
மதுரை ரெயில்வே கோட்டத்தில் இணைப்பு ரெயிலின் பெட்டிகளை பிரிக்கும்போது விதிமுறைகள் பின்பற்றப்படாததால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேயில், மதுரை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் உள்ளிட்ட 15–க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு சில ரெயில்கள் இணைப்பு ரெயிலாக இயக்கப்படுகின்றன. குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்–கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூத்துக்குடியில் இருந்து ஒரு சில பெட்டிகள் வாஞ்சி மணியாச்சி ரெயில்நிலையத்தில் இணைக்கப்படுகின்றன.
மறுமார்க்கத்தில் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில், நாகர்கோவில், குருவாயூர் செல்லும் ரெயில் பெட்டிகளும், தூத்துக்குடி செல்லும் ரெயில் பெட்டிகளும் பிரிக்கப்படுகின்றன. நெல்லை–ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரெயிலில், கேரளாவில் இருந்து வரும் ஹம்ஸபர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் ஈரோடு ரெயில்நிலையத்தில் இணைக்கப்படுகின்றன.
அதேபோல், மறுமார்க்கத்தில் ஜம்முதாவியில் இருந்து வரும் ரெயில் பெட்டிகள் கேரளாவுக்கு ஒரு பகுதியும், நெல்லைக்கு ஒரு பகுதியாகவும் பிரிக்கப்படுகின்றன. அதேபோல், நெல்லையில் இருந்து மதுரை வழியாக ஈரோடு, மயிலாடுதுறை செல்லும் ரெயில்பெட்டிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தனித்தனியாக பிரித்து இயக்கப்படுகின்றன.
பொதுவாக ஒரு ரெயில் பெட்டியை இணைக்கும் போதும், பிரிக்கும் போதும் “ஷண்டர்கள்“, “பாயிண்ட்ஸ் மேன்“ என்று சொல்லப்படும் ரெயில்வே பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் பணியில் இருப்பர். ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில் பெட்டிகளை பராமரிப்பு பணிமனையில் இருந்து ஒரு என்ஜின் மூலம் இழுத்து வந்து பிளாட்பாரங்களில் நிறுத்திவிட்டு, அந்த ரெயிலுக்கான என்ஜினை இணைத்து விட்டு செல்வர். அதேபோல், ரெயில்நிலையத்திற்கு வந்து சேரும் ரெயில் பெட்டிகளை பராமரிப்பு பணிக்காக பணிமனைக்குள் கொண்டு செல்வர். ரெயில் பெட்டிகளை பிளாட்பாரத்துக்குள் நிறுத்தும் போதும், இழுத்துச்செல்லும் போதும் அது குறித்து ரெயில்நிலையத்தில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும் என்பது விதி. முறையாக இணைக்காவிடில், ரெயில் பெட்டிகள் தடம்புரளவும் வாய்ப்புள்ளது. ஆனால் மணியாச்சி மற்றும் திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரெயிலிலும், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயிலிலும், தூத்துக்குடி செல்லும் ரெயில் பெட்டிகள் ரெயிலின் கடைசி பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இருக்கை காலியாக உள்ள ரெயில் பெட்டிகளில் ஏறி அமர வேண்டும் என்றே பயணிகள் நினைப்பதுண்டு.
ஆனால், பெரும்பாலான பயணிகளுக்கு இணைப்பு ரெயில் குறித்த விவரங்கள் தெரிவதில்லை. குருவாயூர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மணியாச்சி ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படும் போது வேறு பாதையில் செல்வதை பார்த்தவுடன் ரெயில் பெட்டியில் இருந்து இறங்க முயற்சிப்பர். இதனால், கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். ஒரு சில நேரங்களில் தண்டவாள பகுதிக்குள் விழுந்து உயிரிழக்கவும் நேரிட வாய்ப்புள்ளது.
இதேபோன்று நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் பெட்டிகள் திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் பிரிக்கப்படும் போதும், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் அவசர அவசரமாக ரெயில் பெட்டியில் இருந்து இறங்க முயற்சித்து விபத்துக்குள்ளாகின்றனர். திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் இருந்து நெல்லை–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயிலின் ஒரு பகுதி ஈரோடுக்கும், ஒரு பகுதி மயிலாடுதுறைக்கும் இயக்கப்படுகிறது. ஆனால், ரெயில் பெட்டிகள் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க போதிய பணியாளர்கள் இங்கு இல்லை என்று கூறப்படுகிறது.
ஆபத்தான இந்த பணியில், நெல்லை–ஈரோடு, மயிலாடுதுறை–நெல்லை பாசஞ்சர் ரெயில்களை(வ.எண்.56821/56825) இணைக்கும் போதும், பிரிக்கும் போதும் உரிய அறிவிப்பு செய்யப்படுவதில்லை. பயணிகளுடன் ரெயில் பெட்டியை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் உள்ள விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இது குறித்து டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் கூறும்போது, மதுரை கோட்டத்தில், சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட ரெயில்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதன்படி, இந்த பணிகளில் 878 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 751 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதாவது 127 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் நாடு முழுவதும் பாதுகாப்பு பிரிவில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே பயணிகளின் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் ரெயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டாமல் உடனடியாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.