கூடலூர் வனப்பகுதியில்: ஆற்றில் தடையை மீறி மீன் பிடித்த 2 பேர் கைது


கூடலூர் வனப்பகுதியில்: ஆற்றில் தடையை மீறி மீன் பிடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2018 3:15 AM IST (Updated: 2 Dec 2018 11:37 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் தடையை மீறி மீன் பிடித்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், அகில், ஓமம் உள்பட பல வகை விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் காட்டுயானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தைப்புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் வசித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்துதல் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் வனப்பகுதியில் பாண்டியாறு உள்பட பல்வேறு ஆறுகளும் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் மீன் பிடிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சில சமூக விரோதிகள் வனப்பகுதியில் முகாமிட்டு தடையை மீறி ஆற்றில் மீன் பிடித்து செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தேவாலா வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு தடையை மீறி 2 பேர் ஆற்றில் வலைவீசி மீன் பிடித்து கொண்டிருப்பதை கண்டனர். வனத்துறையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே வனத்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா பகுதியை சேர்ந்த ரபீஷ்(வயது 26), கோபக்குமார்(45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த வலைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story