காஷ்மீரில் மரணம்: 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரரின் உடல் அடக்கம்


காஷ்மீரில் மரணம்: 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரரின் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 4 Dec 2018 5:00 AM IST (Updated: 4 Dec 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் மரணமடைந்த திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 35). இவர் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் இருந்தபோது கடும் பனிப்பொழிவு காரணமாக அமைக்கப்பட்ட நெருப்பு புகை மூட்டத்தால் மூச்சு திணறி சரவணன் இறந்துபோனார். இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் டெல்லி, சென்னை வழியாக மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலை மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் நடராஜன் பெற்றுக் கொண்டு, திருமங்கலம் அருகே உள்ள சரவணின் சொந்த ஊரான கரிசல்பட்டி கிராமத்திற்கு கொண்டு வந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராணுவ வீரரின் உடல் கிராமத்தில் வைக்கப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், அனுப்பகவுண்டர்கள் சங்கத்தலைவர் செந்தில்குமார் மற்றும் அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் நடராஜன், சரவணனின் குடும்பத்தினரிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து அரசு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து சுடுகாட்டிற்கு ஊர்வலம் சென்றது.

தொடர்ந்து கரிசல்பட்டி சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க சரவணனின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு போர்த்தப்பட்ட தேசிய கொடியை அவருடைய மகள் அருந்ததியிடம் ராணுவத்தினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து அனைத்து சடங்குகளும் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.


Next Story