பெருவளைவாய்க்காலில் மணல் கடத்திய சரக்கு வேன்-லாரி பறிமுதல்


பெருவளைவாய்க்காலில் மணல் கடத்திய சரக்கு வேன்-லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பெருவளைவாய்க்காலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்குவேன் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அருகே செந்தாமரைக்கண் கிராமத்தில் உள்ள பெருவளை வாய்க்காலில் இரவு நேரத்தில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கிராம மக்கள் வாத்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் பெருவளை வாய்க்காலில் சிலர் சரக்கு வேனில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் சரக்கு வேனை அங்கேயே நிறுத்திட்டு ஓடிவிட்டனர்.

இதனையடுத்து போலீசார் சரக்குவேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இதே போல் அப்பகுதியில் லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் தினமும் மணல் கடத்தல் நடைபெறுகிறது. ஒரு சிலர் தங்கள் சுயலாபத்திற்காக செய்யும் இத்தகைய செயலினால் எங்கள் பகுதியில் உள்ள வாய்க்கால் பாதாள அறை போன்று காட்சியளிக்கிறது. போலீசாரும் அவ்வப்போது மணல் கடத்தல் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் மணல் கடத்தல் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story