அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்


அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தார்கள்.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 13 அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் 66 பெண் டாக்டர்கள் உள்பட 156 டாக்டர்களில் 22 பெண் டாக்டர்கள் உள்பட 77 பேர் நேற்று வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போன்று மொத்தம் உள்ள 56 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 55 பெண் டாக்டர்கள் உள்பட 130 பேரில் 54 பெண் டாக்டர்கள் உள்பட 127 பேர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 12 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வழக்கமாக வரும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

ஆனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்தனர். இதே போல் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் 4 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சிவகாசி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 72 டாக்டர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வராததால் நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்து, மாத்திரைகளை மட்டும் நர்ஸ்கள் கொடுத்தனர். அவர்களிடம் மருந்து மாத்திரைகளை வாங்க ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

எலும்பு முறிவு சிகிச்சைக்காக வந்த ஒருவர் டாக்டர்கள் வராததால் நீண்ட நேரமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் காத்திருந்தார். வேலை நிறுத்த போராட்டத்தால் அனைத்து இடங்களிலும் நோயாளிகள் அவதியடைந்தனர்.

Next Story