ரெயில் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் கடலில் காத்திருக்கும் 30 குட்டி கப்பல்கள்
ரெயில்வே தூக்குபாலம் திறக்கப்படாததால் பாம்பன் கடல் பகுதியில் 30 குட்டி கப்பல்கள் கடலில் காத்திருக்கின்றன.
ராமேசுவரம்,
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சுமார் 30 குட்டி கப்பல்கள் சென்னை செல்ல கடந்த மாதம் 13–ந்தேதி பாம்பன் துறைமுகத்துக்கு வந்தன. இவை துறைமுக அதிகாரிகளிடம் ரெயில்வே தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதுபற்றி துறைமுக அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனாலும் இதுவரை இந்த படகுகள் கடந்து செல்ல தூக்குபாலம் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த 23 நாட்களாக பாம்பன் கடல் பகுதியிலேயே குட்டி கப்பல்கள் காத்துக்கிடக்கின்றன.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, பாம்பன் தூக்குப்பாலத்தை திறந்து மூடுவது கடினமாக உள்ளது. தற்போது அது பழுதடைந்து விட்டது. எனவே அதனை அடிக்கடி திறந்து மூடக்கூடிய நிலை இல்லை. இதுபற்றி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.